பழைய குருடி கதவை திறடி கதையா, கட்சி தொடங்கியதில் இருந்து 24,843 ஆவது தடவையாக மீண்டும் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்து, பௌர்ணமிக்கு பௌர்ணமி செத்த குதிரையை அடிக்கும் சடங்கை செய்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.
பெரியாரை நாம் தமிழர் எதிர்ப்பதும், தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காக செலவிடுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதினால், அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக விலகி செல்லலாம்.
ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பின் ஊடாக, திராவிட கட்டமைப்பை வீழ்த்தி விடலாம் என்பதெல்லாம் வெறும் பொய் வெட்டி பிரச்சாரம் என்ற உண்மையையும் நாம் அடிக்கடி நினைவூட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது.
திமுக எனும் கட்டமைப்பு பெரியாரையோ, அவரின் தத்துவத்தையோ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல. பெரியார் எதிர்ப்பு அரசியல் ஊடாக திமுகவை வீழ்த்துவது, கண்ணாடியை திருப்பி வண்டியை start பண்ணும் பம்மாத்து வித்தை தான்.
திராவிடம் பொருளற்ற ஒரு அரசியல் brandஆக மட்டுமே தான் மிஞ்சியிருக்கு. இன்று பெரியாரை பற்றிய அறிவோ, அறிதலோ பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் இல்லை என்பது தான் உண்மை. நடிகர் பிரதீப் ரங்கநாதனை அறிந்த அளவு மக்கள் கூட்டம் கூட பெரியாரை தமிழ்நாட்டில் இன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் பெரியாரின் மீது சூட்டப்படும் புகழும், இழிவும், எந்த தராசிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
அதனால் நாம் தமிழர் இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு பெரியாரை அடிப்பதினால் எந்த பயனும் கிடையாது. மிஞ்சி போனால் பெரியார் என்ற பெயர் மீது அதீத வெறுப்பை கட்டமைக்க முடியுமே தவிர, அந்த பிரச்சாரத்தால், சமகால அரசியலில் எந்த லாபத்தையும் அவர்களால் அடைய முடியாது.
திமுக அதன் பணத்தையும் ஆற்றலையும், பெரியாரியத்தை, வளர்ப்பதிலோ, கட்டமைப்பதிலோ செலவிடுவதில்லை. அவர்கள் அறிஞர் அண்ணா, மற்றும் கருணாநிதயை மையமாக வைத்து தான் அவர்களின் கட்சியின் வரலாறை எழுதி வருகிறார்கள். திமுகவால், இன்னும் ஒரு சொற்ப காலத்தில் பெரியார் கூட இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் தான் இருக்கிறார்.
Taking the above into consideration, நாம் தமிழரின் இன்றைய அரசியலால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்க போவதில்லை.
இந்த இடத்தில் தான் த.வெ.க தெளிவான ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது.
ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்ளே தமிழக அரசியல் நிலவரத்தை DMK vs TVK என்ற இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் விஜய். தெளிவாக திமுக மட்டுமே தான் எங்கள் முதன்மை எதிரியென அடையாளப்படுத்தி, திமுக மீதான தாக்குதல்களை கூர்மைப்படுத்தி வருகிறது த.வெ.க.
போதாக்குறைக்கு திமுக கூட்டணிக்குள்ளும் த.வெ.கவின் நடவடிக்கை ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு.
செங்கோட்டையன் போன்றவர்களின் வரவு த.வெ.கவின் கட்டமைப்பு பலம் தொடர்பான கேள்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
விஜயை காண அலைமோதும் கூட்டம், த.வெ.க வெற்றிப்பெற கூடிய ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
பணம், ஊடகம், மக்கள் கூட்டம், இந்த மூன்றிலும் தான் திமுகவின் அதிகார நீட்சி தங்கியிருக்கு. இந்த மூன்றிலும் திமுகவை வீழ்த்தும் அளவுக்கான வலு சக்தியாக விஜய் இருக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு தெளிவாக கடத்தப்பட்டு வருகிறது. திமுகவை வீழ்த்த கூடிய பலம் பொருந்திய மக்கள் சக்தியாகவும் த.வெ.க மக்கள் மத்தியில் காட்சியளிக்கிறது.
திமுக எதிர்ப்பில் தற்போது த.வெ.கவின் கை தான் ஓங்கி இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க த.வெ.கவின் கவனத்தை சிதைக்கும் நோக்குடன் நிறைய வேலைத்திட்டங்களில் திமுக நிச்சயம் ஈடுபடும். அதையெல்லாம் எப்படி விஜய் சமாளிப்பார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் தமிழரை பற்றி என்ன சொல்ல இருக்கிறது? அவர்களுக்கு பெரியார் ஒழிக என்று கோஷமிடவே நேரம் சரியாக இருக்கும். அதை அவர்கள் செய்துட்டு போகட்டும்.
-Mr. பழுவேட்டரையர்
30/12/2025
Comments
Post a Comment