2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.
1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி
2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.
அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது.
மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.
இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.
1) இனப்படுகொலையை மூடி மறைத்தல்,
2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.
சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.
இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !
தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலாம் எனபதே சிங்களத்தின் நோக்கமாக இருந்தது.
எங்கள் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர், அரங்கேறிய கொடூர காட்சிகள், சேனல் 4 வழியே வெளியே வந்தது.
அது சிங்களத்தை இன்று வரை கதி கலங்க செய்து கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்த இன அழிப்பின் சாட்சியமாக, குறியீடாக இன்று மே 18 நிறுவுப்பட்டாகி விட்டது.
அதற்கான சாட்சியங்கள் இன்று உலக மேடையில் அரங்கேறிக்கொண்டிருக்கு.
இனப்படுகொலைக்கான நினைவு தூபிகள் உலகெங்கும் முளைக்கிறது. சிங்களம் நிம்மதியற்று கதறுகிறது.
மீண்டும் மீண்டும் அது புலிகள் அழிந்த நாள், தலைவரின் மரண நாள் என்று அடையாளப்படுத்த துடிக்குது..
ஆனால் எம் இனமோ அதையெல்லாம் முறியடித்து முன்னகர்கிறது. தலைவரின் மரணத்தை சிங்களம் எழுத முற்பட்டதை, தமிழினம் மாற்றி எழுதிவிட்டது. மரணத்தை வென்றவர் தலைவர். தொடர்ந்து மீண்டெழும் எங்கள் தேசத்தின் ஆன்மத்தில், தமிழின நீதிக்கான முழக்கத்தில் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
அடுத்த தலைமுறை தலைவரின் வாழ்வை தான் படிக்கும், அவர் மரண செய்தி, சிங்களவன் எழுதிய அவரின் மரண செய்தியை அடுத்த தலைமுறை படிக்க விரும்பாது. நாங்கள் படிக்க மாவீரர் நாள் உரைகள் உண்டு.. தலைவனின் உன்னது வாழ்வின் வரலாறு உண்டு. அதனால் இந்த நேரத்தில், தலைவரின் மரணத்தை அனுஷ்டிக்க துடிக்கும் உறவுகளுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று தான். நீங்கள் தலைவர் மீதுள்ள பற்று என்று நினைத்து கொண்டு செய்யும் இந்த செயல், இனப்படுகொலைக்கு எதிரான சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு தான் வலு சேர்க்க உதவும்.
தலைவரின் மரண செய்தியை காவும் சிங்களத்தின் வேலையை நீங்களும் செய்யாதீர்கள்.
எங்கள் போராட்டத்துக்கு முடிவுரை எழுதும் வேலை அது.
வெளிநாட்டில் சிலர் தலைவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், என்று செய்தி பரப்பி செய்யும் பித்தலாட்டங்களை வேறு ஏதாவது விதத்தில் எதிர்கொள்ளுங்கள். மே மாதம், இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைக்கும் மாதமாக மட்டுமே இருக்கட்டும். இயக்கம் எங்கள் அரண், அந்த அரண் விழுந்தால், இனம் விழும் என்பதன் சாட்சியமாகவே மே 2009 இருக்கும், இருக்க வேண்டும்.
-Mr. பழுவேட்டரையர்
19/05/2025
Comments
Post a Comment