Skip to main content

அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலின் சாதிய கொலை

இந்த மாதம் 13 திகதியன்று, யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் & கொலையை சுற்றி நிறைய கதைகளும், கட்டு கதைகளும் சமூக வலைத்தளங்களில் பின்னப்படுவதை காண கூடியதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களில் உண்மையோடு சேர்ந்து உண்மையான குற்றவாளிகளும் கதையோடு கதையா தொலைந்து போகிறார்கள்.

அதனால் நடந்த சம்பவத்தை பற்றியும், அதில் சாதியவாதத்தின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவு ஊடாக நாம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

இந்த பிரச்சனை பொன்னாலையில் இருந்து தொடங்கவில்லை. 

2021/2022ஆம் ஆண்டு கால பகுதியில், அடைக்கலந் தோட்டம் கோவிலில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது. 

13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பவித்திரன் என்ற இளைஞன் வட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார். 
கோவிலை சுற்றி வாழும் மக்கள் மத்தியில் வேளாளர்கள் மட்டும் முக்குவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். (இந்த இரண்டு சாதிகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக கருத முடியாது. இரண்டுமே ஈழத்தில் ஆதிக்க சாதிகள் தான்)

அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் வேளாளர்கள் சாதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் வாழும் முக்குவர் சாதியை சேர்ந்த பவித்திரன் மட்டும் அவரது சகோதரர், இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. அங்குள்ள வேளாளர் சமூக இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நட்பும் இருந்திருக்கிறது. அந்த கோவிலில் சாமி தூக்கும் சடங்குகளில் எல்லாம் இரு சாதியை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இப்படிப்பட்ட ஒரு சூழலில்,2021/22 ஆம் ஆண்டு கால பகுதியில் பவித்திரனின் சகோதரர் தன் சாதி அல்லாத, வேறொரு ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து ஒரு பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறார். 

இந்த சாதி மறுப்பு திருமணம், இரு குடும்பங்களின் சம்மதத்தோடு தான் நடந்திருக்கு. அந்த திருமணத்தினால் அந்த ஊரில் எந்த சிக்கலோ, சண்டையோ நடக்கவில்லை. ஊரிலும் அது ஒரு பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு சடங்காகவே இருந்திருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் சிலர் பவித்திரன் கொலை செய்யப்பட்டதை ஆணவ படுகொலையாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது ஆணவ படுகொலை கிடையாது. சாதி தான் இந்த தொடர் கொலைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது, ஆனால் சாதி மறுப்பு செய்து கொண்ட ஜோடிக்கும், அவர்கள் குடும்பத்துக்கும், ஊருக்கும் அந்த கல்யாணத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. 

பவித்திரனின் சகோதரத்தின் திருமணத்தின் பின்னர், நடந்த கோவில் திருவிழாவில் தான் பிரச்சனை தொடங்கியது. திருவிழா காலத்தில் ஒரு நாள் பவித்திரனின் சகோதரன் சாமி தூக்க கோவிலுக்கு சென்ற போது. கோவிலில் இருந்த இரண்டு மூன்ற வேளாள சாதியை சேர்ந்த இளைஞர்கள் அவரை தடுத்திருக்கிறார்கள். “ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தோடு சம்பந்தம் வைத்து கொண்டு, நீ சாமிய தூக்க கூடாது” என்றாற்போல் அந்த சாதியவாத வேளாளர் இளைஞர்கள் பவித்திரனின் சகோதரத்திடம் சொல்லியிருக்கிறார்கள் 

பவித்திரனின் சகோதரன் இந்த சிக்கலை பவித்திரனிடம் தெரிவிக்க, பவித்திரன் வாளை எடுத்து கொண்டு,தன் தம்பியை சாமி தூக்க விடாமல் செய்த இளைஞர்களை தாக்கியிருக்கிறார். 

இங்கே இந்த கோவில் தான் சாதியவாதம் கக்கப்பட்ட இடமாக இருக்கிறது. இதுவரை நடந்தேறிய அத்தனை வன்முறைக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தது, கோவிலில் நடந்த இந்த பிரச்சனை தான். 

பவித்திரனின் சகோதரரின் சாதி மறுப்பு திருமணத்தை ஒரு பிரச்சனையாக்கியது கோவில் நிர்வாகமும், அதனுடன் தொடர்புப்பட்ட அந்த 3 ஆதிக்க சாதி வேளாளர் இளைஞர்களும் தான். 

இந்த இடத்தில் பிரச்சனைக்கு காரணமாக இருந்த கோவிலையும், நிர்வாகத்தையும் விட்டுட்டு, ஒட்டு மொத்த ஊரையும், மக்களையும் பொதுமைப்படுத்தி விமர்சிப்பது வெறும் வன்மத்தின் வெளிப்பாடே. 

இந்த சாதியவாத பிரச்சனை 2021-2022 கால பகுதியில் நடந்திருக்கிறது. ஆனால் இது அன்று எந்த ஒரு செய்தி ஊடகத்திலும் வரவில்லை. அதனால் இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வாய் வழியாக பகிரப்படும் ஊர் மக்களின் செய்திகளின் ஊடாகவே கடத்தப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் சொல்லும் செய்தியின் விவரங்களை தான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். 

அந்த இளைஞர்களுக்கு வேறு முன் பகை, சிக்கல்கள் இருந்ததா இல்லையா என்பதை பற்றி எந்த செய்தியும் எங்களுக்கு தெரியாது. காவல்துறையும் இது தொடர்பான விசாரணைகளை நடத்தியதாக தெரியவில்லை. 

அன்று பவித்திரனால் வெட்டப்பட்ட சாதியவாத கும்பல், பழி தீர்க்க பவித்திரணை, இப்போது 2 வருடம் கழித்து, வாய்ப்புக்கு காத்திருந்து கொலை செய்திருக்கிறார்கள். 

2009க்கு பின்னர் ஈழத்தில் உள்ள கோவிகளுக்குள் மெல்ல மெல்ல இந்திய தூதரகத்தின் தலையீட்டின் ஊடாகவும், இந்துத்துவ பிரச்சாரங்களின் ஊடாகவும், தமிழர் மண்ணுக்கு விரோதமான மதவாத, சாதியவாத கருத்துக்கள் ஊடுருவ தொடங்கியிருக்கிறது. இந்த குற்ற செயல்கள் அனைத்தும் அதன் விளைவே.
 
இவற்றுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை ஈழத்தில் உள்ள தமிழ் கட்சிகளும் அமைப்புகளும், சைவ சமய கட்டமைப்புகளும் மும்முரமாக செய்ய வேண்டும். 

அதே நேரம் இந்த கொலைக்கு பின்னால் வெறும் சாதி மட்டும் தான் இருந்தது என்று சொல்லிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது. சிங்கள கடற்படையின் அனுசரணையும் இந்த கொலைக்கு இருந்திருக்கிறது என்று உயிர் தப்பிய பவித்திரனின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று, கொலையாளிகளால் பவித்திரனும், அவரது மனைவியும் விரட்டப்பட்டு, அருகில் இருந்த கடற்படை முகாமை நோக்கி ஓடியிருக்கிறார்கள். கொலையாளிகளால் ஆயுதங்களோடு விரட்டப்படும் அந்த ஜோடியை கண்ட கடற்படையினர், அந்த ஜோடிக்கு உதவ முன்வராது, பாதுகாப்பு தேடி ஓடி வந்தவர்களை அடித்து விரட்டி, அவர்களின் கடத்தலுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறது. 

இதனால் கடத்தல்காரர்களுக்கும் இலங்கை கடற்படை/ராணுவத்துக்கும் தொடர்பிருக்கும் என்று கருதப்படுகிறது. பவித்திரனை இழந்து தவிக்கும் அவரது மனைவி, கடற்படையின் துணையோடு தான் இது நடந்தது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட சி சி டிவி காட்சிகள், திருமதி பவித்திரனின் வாக்குமூலத்தை உறுதி செய்யும் விதமாகவே இருக்கிறது. 

இந்த கொலைகளுக்கு காரணமான முதல் குற்றவாளிகள் கோவில் நிர்வாகம் என்றால், இரண்டாவது குற்றவாளிகளாக இணைக்கப்பட வேண்டியது சிங்கள கடற்படையினரின் பெயர்கள் தான்.

தமிழின விடுதலை போராட்டத்தின் முக்கிய, சமூக விடுதலை லட்சியமாக இருக்கும் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை, விடுதலை புலிகள் இயக்கம் முன்னெடுத்தது போல், தற்போதைய அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும்!

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழத்தில் சாதியம் ஒரு குற்றமாக பார்க்கப்பட்டது. தீண்டாமையை கடைப்பிடித்த கோவில்கள் இழுத்து மூடப்பட்டன, சாதியத்தை கக்கிய காடையர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். எந்த சாதி தடிப்பத்தோடும் எவனும் அவர்கள் ஆட்சியில் ஆட முடியாது.

அப்போது ஈழம் சமூக நீதி கோலோச்சிய மாவீரர்களின் மண்ணாக இருந்தது. 

இப்போது சமூகத்துக்குள் அவர்கள் விதைத்த அத்தனை நல்ல மாற்றங்களையும் மண்ணோடு மண்ணாக்க ஒரு கூட்டம் சாதி மதம் என்ற பெயரில் அலைந்து கொண்டிருக்கிறது. 

மதம், சாதியாவாதத்தை நியாப்படுத்தும் வேலையை செய்கிறது, 
அதிகாரமும் அரசும் அதை பாதுகாக்கும் வேலையை செய்கிறது. 

இந்த இரண்டு தரப்பையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இருக்கிறது. 

இத்தகைய கொடுமைகள் இனி அரங்கேறாமல் இருக்க வேண்டும் என்றால், 

சாதியவாத செயல்கள் அரங்கேறும் கோவில்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மக்களும், அரசியல்வாதிகளும் எடுக்க வேண்டும். அந்த கோவில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

குற்றம் நடந்த இடத்தில் கந்தசாமியாக முருகன் இருப்பதினால், அந்த இடத்துக்கு கூரையாக கோபுரம் இருப்பதினால், அதற்குள் நடக்கும் குற்றம் குற்றமில்லை என்றாகிவிடாது. 

மதம் தரும் பாதுகாப்பை பயன்படுத்தி, சாதி வெறி பிடித்து அலையும் காவி கூட்டங்கள் தோலுரிக்கப்பட வேண்டும். 

மாவீரம் கற்றுத்தந்த சமூக நீதி போற்றி பேணப்பட வேண்டும்! 

சாதி ஒழியட்டும்! 
அதற்கு அடைக்கலம் கொடுக்கும் அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவில்களும் அதோடு சேர்ந்து ஒழியட்டும்! 

-Mr. பழுவேட்டரையர்
18/03/2024


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...